
சின்ன தலைவலின்னா கூட மெடிக்கல் ஷாப் போய் மாத்திரை வாங்கிப் போடுறவங்க நிறைய பேர் இருக்காங்க... இந்த மாதிரி மருத்துவர் அனுமதியின்றி மாத்திரை வாங்கிப் போடுற பழக்கம் இருந்தா அதை இன்றோடு நிறுத்திடுங்க...! மருத்துவர் அனுமதியின்றி மாத்திரை வாங்கி சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர் ஏ.ரத்தின சபாபதி விளக்குகிறார்.
* எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரை என்று ஆகி விட்டதே. மருந்துகள் உபயோகத்தில் புரொஃபஸரான உங்களது அபிப்பிராயம் என்ன?
இன்று வியாதிகளும் பெருகி விட்டன. அதற்கேற்றார்போல் மருந்துகளும் பெருகி விட்டன. மருந்துகள், மாத்திரைகள் ஒவ்வொரு மனித உடலுக்கும் தேவைதான்! ஆனால் அதன் அளவை நிர்ணயிப்பது ஒரு மருத்துவரால் மட்டுமே இயலும்.
* அன்றைய கால கட்ட மருந்துகள் இன்றைய கால கட்ட மருந்துகள் வித்தியாசம் என்ன?
அன்று மிகச் சிறிய அளவில்தான் Anti biotics கிடைக்கப் பெற்றன. இன்று பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் பெருகி அதற்கேற்ற மருந்துகளும் பெருகி வருகின்றன. ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு பாக்டீரியா என்றும் புரிகிறது. மருத்துவ உலகம் சுறுசுறுப்பாக செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அன்று மருத்துவரைக் கேட்காமல் ஒரு மாத்திரை கூட அதிகமாகப் போட மாட்டார்கள். இன்று அக்கம்பக்கம், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று கேட்டு மாத்திரைகளை விழுங்குவதுதான் ஃபேஷன்!
* இப்படி மக்கள் செய்வது சரியா? பெருகி வரும் வியாதிகள், மற்றும் அதற்கான புது கண்டுபிடிப்பு மாத்திரைகள் பற்றி இன்றைய மருத்துவர்கள் அறிவது எப்படி?
முதல் கேள்விக்கு மருத்துவரைக் கேட்காமல் மருந்துகளை எடுப்பது மிகப் பெரிய தவறாகும். இப்படி Overdose\Underdose இல் அவதிப்பட்டு எங்களிடம் வரும் பேஷண்டுகள் ஏராளம்.
இன்று மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ், இன்டர்நெட் வெளிநாட்டு மருத்துவர்கள் மூலமாக, புது மருந்துகளைப் பற்றி நாங்கள் அறிகிறோம். அதற்கு மருத்துவர்கள் சதா உழைக்க வேண்டும். அறிவைப் பெருக்க வேண்டும்.
* Paedriatics - Geniatics என்று குழந்தை மருத்துவம், வயதானவர்களின் மருத்துவம் என்று பெருகி உள்ளதே இது தேவையா?
நிச்சயம் தேவை. சளி, ஜுரம் என்று அனைவருக்கும் பொது என்றாலும் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அவரவர்களுடைய வயது, வாழும் முறை, ஆகியவைகளின் வித்தியாசம் இதைக் கருத்தில் கொண்டுதான் மருந்துகள் அளிக்கிறோம். பிபி, சுகர், தைராய்டு போன்ற பிரச்சினைகளுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவம் அளிக்க இயலுமா? ஹைசுகர், லோ சுகர், இரண்டுமே ஒன்றாகத்தான் ஒரே மருத்துவர்தானே கண்டுபிடித்து மருத்துவம் செய்ய வேண்டும்.
* மெடிக்கல் இன்சூரன்ஸ் இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு தேவையான ஒன்றுதான் அதில் சந்தேகமில்லை. ஆனால் இதில் பணம் சம்பாதிக்க நினைத்தால் தவறு. இப்பொழுது இன்று பல இன்சூரன்ஸ் கம்பெனிகள் விழிப்புடன் செயல்பட்டு மக்கள் பலன் அடைய வேறு சிறந்த முறையில் பணி புரிகின்றார்கள். தேவையற்ற வகையில் இந்தப் பாலிசிகளை உபயோகித்தால் நாளை எமர்ஜென்ஸி எனும் பொழுது உபயோகமற்றுப் போய் விடுகின்றது என்பதை மக்கள் உணர வேண்டும்.
* ஸ்கேன், எக்ஸ்ரே லேப் டெஸ்ட் இவை அடிக்கடி செய்வது சரியா?
இன்றைய மருத்துவ உலகில், இவை ஆற்றும் பணிகள் மிகத் தேவை. அதே சமயம் ஒரு மருத்துவர் இந்த அறிகுறிகள் இந்த வியாதிக்குத்தான் என்று அனுபவப் பூர்வமாக உணர வேண்டும். மேலும் இன்று மக்கள் ஊசி போட்டு எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எழுதித் தராத டாக்டர் ஒரு டாக்டரே அல்ல எனும் எண்ணம் கொண்டுள்ளனர். டாக்டர், பேஷண்டு இடையே ஒரு நம்பிக்கை, புரிதல் வேண்டும். அதனால்தான் ஜி.பி. எனப்படும் குடும்ப டாக்டர்கள் இன்று மிகத் தேவை என்று வலியுறுத்தி வருகிறேன். அவர்கள் தான் எது வெறும் தலைவலி எது நியூராலஜிஸ்டிடம் செல்ல வேண்டும். எது களைப்பு எது பெரிய வியாதிக்கு அறிகுறி என்று கூற இயலும்? குடும்பத்துடன் ஒன்றி விடும் மருத்துவர் என்பதால் குடும்பப் பிரச்சினைகளினால் ஏற்படும் ஸ்ட்ரஸ் இது என்று சில அறிகுறிகளை வைத்துக் கூறி விட இயலும்.
* கலர் கலராக விட்டமின் மாத்திரைகள் குண்டாவதற்கு, இளைப்பதற்கு, ட்ரக் அடிஷன் ஆல்கஹாலிலும் மனநோய் என்று மாத்திரைகளின் தாக்கம் பற்றி.....?
நீங்கள் கடைசியாகக் கூறிய மூன்றிற்கும் பேஷண்ட் ஒத்துழைத்தால் மட்டுமே மருந்து அளிக்க இயலும். விட்டமின் மாத்திரைகளை மருத்துவ அனுமதியின்றி எடுப்பது பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடும். இளைப்பதற்கும், குண்டாவதற்கும் எண்ணற்ற காரணங்கள் உள்ளன. அது தெரியாமல் மாத்திரைகளை விழுங்கி ஆஸ்பத்திரியில் வந்து விழுபவர்கள் ஏராளம்.
* செல்ஃப் மெடிகேஷன், தானாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உங்கள் அபிப்பிராயம் என்ன?
கூடாது, கூடவே கூடாது. பக்கத்து வீட்டு நண்பர்கள் அத்தை பாட்டி இவர்கள் சொல்லும் மாத்திரைகளையும் தயவு செய்து எடுக்க வேண்டாம். அது போலவே 5 வருடம் முன்பு டாக்டர் கொடுத்த மருந்தைத் தானாகவே எடுத்துக் கொள்வது அதை விட கெடுதல். டாக்டர் கன்ஸல்டேஷன் போக வேண்டுமே எனும் அலுப்பு ஆபத்தை விளைவிக்கும். பிரிஸ்கிருப்ஷன் இல்லாமல் மருந்துகளை வாங்குவது என்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
* இன்று பரவலாக பேசப்படும் வியாதி ஹெச்.ஐ.வி. இதற்கு மருந்து உண்டா?
உடலுறவு, ரத்தம், எச்சில், தாய் கருவிலிருக்கும் குழந்தைக்கு அளிப்பது இதன் மூலம் பரவும் ஹெச்ஐவி, சரியான உணவு, சுகாதாரமான வாழ்க்கை இவற்றின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பது நிச்சயம். திருமணத்திற்கு முன்பு இரத்தப் பரிசோதனை இரு பாலருக்கும் அவசியம்.
* பெண்களுக்கு ஸ்பெஷல் அட்வைஸ்?
லேடீஸ் ஸ்பெஷல் மூலமாக பெண்களுக்கு ஸ்பெஷல் மெஸேஜ் கொடுக்கத்தான் வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதால் முதலில் உங்கள் உடல் நிலையைப் பற்றி அறியுங்கள். பிறகு குடும்பத்தாரின் நலம் இரண்டையும் சரிவர பாலன்ஸ் செய்தால் நலமான வாழ்க்கைதான்.
பேஷண்டுகள் கூட்டம், மெடிக்கல் ரெப்ரஸென்டேடிவ் கூட்டம், எமர்ஜென்ஸி கேஸ்கள் என்று பரபரப்பாக ஓடும் அவர் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கைக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி கூறி விடை பெறுகிறோம்.
டாக்டர் டிப்ஸ்:
* மருத்துவர் கூறிய அளவு மாத்திரைகள் மட்டுமே எடுக்க வேண்டும்.
* மருத்துவரைக் கேட்காமல் மருந்து எடுக்க வேண்டாம்.
* குழந்தைகளை Paedriatics வயதானவர்களை Geniatics மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.
* பி.பி, சர்க்கரை நோய், இதயநோய் மூன்றும் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை மருத்துவ செக் அப் அவசியம் செய்ய உணருங்கள்.
* ஒரு பேமிலி டாக்டர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கட்டாயம் தேவை என்று உணருங்கள்.
* சரியான, தரமான மெடிக்கல் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள். ஏமாற்றுபவர்களிடம் செல்ல வேண்டாம்.
* பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், கூறுவதைக் கேட்டு விட்டமின் மாத்திரைகள், டானிக் போன்றவை எடுக்க வேண்டாம்.
* Hepatitis 'B' தொற்று நோய் பற்றி அறியுங்கள்.
* சுத்தமான சுகாதாரம் 80% நோய்களைத் தடுக்கும்.
* பெண்கள் கட்டாயம் தங்கள் உடல் நிலையை நன்கு பேணி காத்தால் குடும்பம் நலம் பெறும்.
No Comment to " மருத்துவர் அனுமதியின்றி மாத்திரை சாப்பிடாதீர்கள்! "
Your Comment Has Been Published!