சில பயறு வகைகளின் மருத்துவ குணங்கள்

By Unknown → வியாழன், 28 ஆகஸ்ட், 2014
Advertise

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. 

பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.

எச்சரிக்கை: ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது.

முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்’ அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பச்சைப் பயறு
எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

கொண்டைக்கடலை
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer) போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மொச்சைப் பயறு
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.

காராமணி
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

கொள்ளு
எலும்புக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்; தசைகள் வலுப் பெறும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அதிகம் சாப்பிடக் கூடாது. அவ்வப்போது, கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது. புரதச் சத்து அதிகம் இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ராஜ்மா
தசைகளை நன்றாக இறுகச்செய்வதோடு, மலச் சிக்கலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உண்டு. மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஓரளவு இருக்கின்றன. சோடியம், பொட்டாஷியம் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடலை வருத்தி உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.

பட்டாணி
காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி மற்றும் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து ஓரளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் - சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடலாம். குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.

சோயா
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.

துவரைப் பயறு
உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. இதில், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி, நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " சில பயறு வகைகளின் மருத்துவ குணங்கள் "

Your Comment Has Been Published!