![]()
நூறு ஏக்கர்... இரு நூறு ஏக்கர் என்று பயிர் செய்பவரல்ல
இந்த இந்திரகுமார். கிடைக்கும் இடம் அரை அடியோ... ஒரு
அடியோ... அல்லது வீசி எறிவதற்காக நகரத்து வீடுகளில் இருக்கும்
ஒரு கொட்டாங்குச்சி கிடைத்தால் கூட, அதையே தன்னுடைய நிலமாக்கிக்
கொண்டு பயிர்களை வளர்த்து அறுவடை செய்யும் அற்புத வித்தையைக்
கற்று வைத்திருக்கும்... கற்றுக்கொடுக்கும் மனிதர்!
சென்னையிலிருந்து தெற்கு நோக்கி விரியும் சாலையில், பல்லாவரத்தை
ஒட்டிக்கொண் டிருக்கும் பம்மலில்தான் அவருடைய வீடு. சென்னைக்குச்
சற்றும் இளைக்காமல், இண்டு இடுக்கெல்லாம் வீடுகள் முளைத்துவிட்ட
கான்கிரீட் காடுகளில் ஒன்றுதான் பம்மல். அந்த கான்கிரீட் காடுகளுக்கு
ஈடுகொடுத்து செடி, கொடிகளை வளர்த்துக் கொண்டிருப்பவர்
இந்திரகுமார். இவர், எக்ஸ்னோராவின் துணை அமைப்பான 'இல்ல
எக்ஸ்னோரா' என்பதன் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார்
ஒரு நாள் காலை வேளையில் அவருடைய வீட்டில் நாம் ஆஜரானோம்.
வீட்டுத் தோட்டம் முழுக்க பலன் தரும் பழ மரங்கள்... மொட்டை
மாடிக்கு பச்சைத் தொப்பிப் போட்டது போல, திரும்பிய பக்கமெல்லாம்
காய்கறிச் செடிகள்... மாடிப்படிகளில் கீரைகள்... ஜன்ன லோரத்தில்
ரோஜாக்கள்... என்று விதம்விதமாக நம்மை பரவசப்படுத்தின.
சற்று உணர்ச்சிவசப்பட்டவராகவே பேசத் தொடங்கினார் இந்திரகுமார்.
‘‘மெக்கானிக்கல் இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கின நான்,
இன்னிக்கு இயற்கை இன்ஜினீயரா மாறிட்டேன். இதுக்குக் காரணம்
ஒரு செடிதான். ஆனா, அது என்னோட எதிரிச் செடி. அதுவும்
அன்பான எதிரி. அதோ, எதிர்ல புதரா மண்டிக்கிடக்கே பார்த்தீனியச்
செடி. அதுதான் அந்த எதிரி. பல வருஷங்களுக்கு முன்னாடி அமெரிக்காவிலிருந்து
கோதுமையோட சேர்ந்து இந்தியாவுக்கு வந்த விருந்தாளிதான்
பார்த்தீனியம். இதோட பேரைக்கேட்டாலே பலரும் அலறித்துடிப்பாங்க.
அந்த அளவுக்கு ஒரு அபாயகர மானச் செடி.
2001-ம் ஆண்டுல இந்தப் பகுதியில இருக்கற குளத்தை 'எக்ஸ்னோரா'
அமைப்பு மூலமா தூர் வார முடிவு செஞ்சோம். அந்த இடத்துல
முளைச்சி கிடந்த பார்த்தீனியத்தை ஆளாளுக்குப் புடுங்கிப் போட்டோம்.
அவ்வளவுதான் அன்னிக்கு ராத்திரியே உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சி.
உடம்பு முழுக்க சின்னதும், பெருசுமான கட்டிகள் வேற வந்துடுச்சி.
உயிர் பொழைக்கிறதே கஷ்டங்கிற நிலைமை. அலோபதி மருந்துகளைக்
காட்டிலும் சித்தமருந்து கள்தான் இதுக்கு நிவாரணம் கொடுக்கும்னு
சிலர் சொன்னாங்க. அதன்படியேச் சாப்பிட்டேன். கொஞ்சம்,
கொஞ்சமா ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பினேன். நான் வேலை
பார்த்துக்கிட்டிருந்த கம்பெனியில இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக்கிட்டு
வெளியே வந்தவன்தான்... இன்னிக்கு வரைக்கும் இயற்கையோட
வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்கேன்’’ என்று நிறுத்தியவர்,
![]()
எட்டு வகையான மல்லிகை, விதம்விதமான ரோஜா, மனசை
மயக்குற மனோரஞ்சிதம், சம்பங்கி, கோழி சம்பங்கி, காகிதப்பூ,
செம்பருத்தி, நித்திய கல்யாணினு நம்ம ஊரு பூக்களையும், லில்லி,
லிச்சினு வெளிநாட்டு வகை பூக்களையும் தோட்டத்துல பயிர் செய்திருக்கேன்.
இதையெல்லாம் நான் ஆரம்பிச்சது சென்னையே தண்ணீர் பஞ்சத்தால
தள்ளாடிக்கிட்டு இருந்த நேரத்துலதான். இதைப் பார்த்துட்டு,
'மனுஷனே காசுக்கு தண்ணி வாங்கி குடிக்கும்போது, எங்கே இருந்து
இந்த ஆளு செடிகளுக்குத் தண்ணி கொடுக்க போறார்'னு அக்கம்
பக்கத்துல பேசுனாங்க. மழைத் தண்ணிதான் செடியைக் காப்பாத்தும்னு
எனக்குத் தோணுச்சி. முதல் வேலையா மழை நீர் சேகரிக்கத்
தொட்டிக் கட்டினேன். எதிர்பார்த்தபடியே மழைநீர் நிறைய கிடைச்சி,
நிலத்துல சேர்ந்துது. அந்தக் காலக்கட்டத்துல ஆளாளுக்கு போர்
போட்டு பூமியில இருந்த தண்ணியை உறிஞ்சு எடுத்தாங்க. ஆனா,
நான் இன்னிய தேதி வரைக்கும் போர் போடல. அதே 23 அடி
கிணத்துல இருந்துதான் தண்ணி எடுத்துக் குடிச்சிக்கிட்டு இருக்கோம்.
மழை நீர் சேகரிப்பு மூலமா மரம், செடிகளுக்கும் தண்ணி கிடைச்சுடுது''
என்று சொன்னவர், அடுத்தபடியாக மாடித்தோட்டத்துக்கு வந்தார்.
![]()
வீட்டுல காய்கறித்தோட்டம் போடறதுன்னதும் பெரிசா இடத்தைத்
தேடி அலைய வேண்டாம். மனசு வெச்சாலே போதும். மொட்டை
மாடியில காய்கறி; மாடிப்படிகள்ல கீரை; சன்னல் ஓரங்கள்ல
ரோஜானு எல்லாவித செடிகளையும் நட்டு பலன் பார்த்திட முடியும்.
பத்தடி உயரத்துல இருக்கற பைப்புல கூட விதவிதமான காய்கறிச்
செடியை பயிர்செய்ய முடியும். தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியற
கொட்டாங்குச்சியில கீரை வளர்க்கலாம். உடைந்த மண்பானையில
கத்தரிக்காய் வளர்க்கலாம். எதுல செடி வளர்க்கணும்னாலும் அடிப்படையான
சில விஷயங்கள மனசுல வெச்சிக்கிட்டா போதும். நீங்க செடி
வளர்க்க நினைக்கற இடத்துல ஒரு பங்கு மண்ணு, ஒரு பங்கு மணல்,
ஒரு பங்கு இயற்கை உரம் இது மூணையும் கலந்து போட்டு அதுல
விதைச்சிடலாம். செடி வளர்க்கறதுக்காக நீங்க பயன்படுத்தறது
கொட்டாங்குச்சியோ, மண்பானையோ... எதுவா இருந்தாலும்
அடியில தண்ணி கசியறதுக்காக சிறுதுளைபோட வேண்டியது அவசியம்!
![]()
சத்தான சமச்சாரம்னு கீரைகளை வாங்கிப் பலரும் சாப்பிடறாங்க.
ஆனா, அதுல எந்தளவுக்கு பூச்சி மருந்து தெளிச்சி எடுத்துக்கிட்டு
வரறாங்கனு பலருக்கும் தெரியாது. தயவு செஞ்சி கீரையை மட்டுமாவது
வீட்டுலயே வளர்த்துச் சாப்பிடுங்க. ஒரு குட்டாங்குச்சி, கொஞ்சம்
மண். கொஞ்சம் மணல், கொஞ்சம் இயற்கை உரம், இதோட
ஒரு பிடி வெந்தயம் இருந்தா போதும், அடுத்த 20-ம் நாள்
தளதளனு வெந்தயக் கீரை வளர்ந்திருக்கும். கொட்டாங்குச்சியில
மண்ணையும் மணலையும் நிரப்பி, உரத்தையும் போட்டு தண்ணியை
ஊத்தி, வெந்தயத்தைப் போட்டு வெயில் படுற மாதிரியான இடத்துல
வெச்சிட்டா போதும். இதே முறையில அரைக்கீரை, முளைக்கீரை,
சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரைனு பல கீரைகளையும் வளர்க்கமுடியும்.
கொத்தமல்லி, புதினாவையும் கூட இதேபோல வளர்க்கலாம்.
![]()
''காய்கறிகளையும் பயிர் பண்ண ஆரம்பிச்ச பிறகு அதிகளவுக்கு
தண்ணி கொடுக்க வேண்டியதாயிடுச்சி. குளிக்க, துணி துவைக்கனு
பயன்படுத்தற தண்ணியெல்லாம் சோப்பு கலந்து வீணாத்தானே போகுது,
அதை சுத்திகரிச்சி பயன்படுத்தலாமேனு ஒரு யோசனை. உடனே
பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன். கல்வாழை, சேப்பக் கிழங்கு இதையெல்லாம்
ஜல்லியும் மண்ணும் நிரப்பின ஒரு தொட்டியில நட்டுவெச்சி, அதுல
பாத்ரூம் தண்ணியை விட்டு சுத்தப்படுத்துறேன்’’ என்று சொன்னவர்,
செப்டிக் டேங்க் அருகே இருக்கும் இன்னொரு தொட்டியைக் காண்பித்தார்.
‘‘இந்தத் தொட்டியில இருக்கிற தண்ணிதான், என் செடிகளுக்கு
உயிர் கொடுத்துக்கிட்டிருக்குது. காபி கலர்ல இருக்கற இந்தத்
தண்ணி எங்க இருந்து வருதுனு பார்க்கறீங்களா... எல்லாம் 'செப்டிக்
டேங்க்'னு சொல்ற மனிதக் கழிவுகள் சேருகிற தொட்டித் தண்ணிதான்.
வழக்கமா செப்டிக் டேங்கைத் திறந்தா ஆளை அடிச்சி போடற
மாதிரி விஷவாயு தாக்கும். ஆனா, எந்த ஒரு கெட்ட வாசனையும்
இல்லாம இந்தத் தொட்டியை நான் மாத்தி வெச்சிருக்கேன்''
என்று அவர் சொன்னதும் வியப்பால் நம் விழிகள் விரிந்தன.
''ஆஸ்திரேலியாவில் ஆக்டிசெம் (Actizem)
என்கிற பாக்டீரியாவைப் பல விஷயங்களுக்குப் பயன் படுத்தறது
பத்தி நண்பர் மூலமா தெரிஞ்சுகிட்டேன். கப்பல், விமானம் இதுல
உள்ள கழிவறைகளுக்கு இந்தப் பாக்டீரியாவைததான் பயன்படுத்தறாங்க.
'இந்தப் பாக்டீரியாவை 50 கிராம் அளவுக்கு செப்டிக் டேங்க்ல
விட்டா, மனித கழிவுகளை சிதைச்சு தீமை செய்ய கூடிய பாக்டீரியாக்களை
எல்லாம் அழிச்சுடும். கழிவுகளை நீர் வடிவமாவும் மாற்றிடும்.
எந்த விதமான கெட்ட வாசனையும் வீசாது. பக்க விளை வுகளும்
இருக்காது'னு சொன்னாங்க. 50 கிராம் பாக்டீரியா 250 ரூபாய்னு
வாங்கிட்டு வந்து செப்டிக் டேங்குல போட்டேன். அடுத்த சில
வாரங்கள்ல, வெறும் தண்ணி மட்டும்தான் செப்டிக் டேங்க்ல இருந்துச்சு.
அந்தத் தண்ணியை மரச்செடிகளுக்கு மட்டும் பாய்ச்சுகிறேன். ரெண்டு
மூணு வருஷத்துக்கு ஒரு முறை செப்டிக் டேங்க்கை முழுசா சுத்தம்
பண்றதுக்கு உண்டான செலவும் மிச்சமாயிடுச்சி.
ஒருமுறை இந்த பாக்டீரியாவை போட்டாலே போதும். அது
பெருகி வளர்ந்துகிட்டே இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா சம்பளம்
வாங்காம செப்டிக் டேங்க்கை சுத்தம் பண்ற வேலையை பாக்குது
அந்த பாக்டீரியா’’ என்று சிரித்தபடியே சொன்ன இந்திரகுமார்,
‘‘வீட்டுல இருந்து தண்ணி அதிகமா வெளியேறுற இன்னொரு இடம்
சமையல் கட்டு. பாத்திரம் கழுவுற தண்ணி, கஞ்சித் தண்ணி இப்படி
பல ரகத்துல தண்ணி வெளியே வரும். அப்படி தண்ணி வெளிய வர்ற
இடத்துல ஒரு வேலையை செஞ்சி ரெண்டு விதமான பலனை எடுக்கிறேன்.
அலங்கார மீன்களுக்கு உணவா ஒருவகையான மண்புழுவைப் போடுவாங்க.
குட்டிக்குட்டியா இருக்கிற இந்த மண்புழுவை வாங்கிக்கிட்டு வந்து
சமையல் கட்டு தண்ணி வெளியே வர்ற பைப்புக்கு கீழே மண்ணுல
விட்டேன். சமையல் கழிவு நீர்ல இருக்கற சத்துக்களை இந்த மண்புழுக்கள்
சளைக்காம சாப்பிடுது. அதுக்கு நன்றிக் கடனா என்னோட மரங்களுக்கும்,
காய்கறி செடிங்களுக்கும் சத்தான மண்புழு உரத்தை மண்ணுக்குமேலே
கொண்டுவந்து கொடுக்குதுங்க.
'நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்'னு சொல்வாங்க. அதுவும்
ஆரோக்கியமான குடும்பமா இருக்கணும். அதுக்கு எங்க வீடு ஒரு
எடுத்துக்காட்டா இருக்கு. கிட்டத்தட்ட ஒரு கண்காட்சியாவும் எங்க
வீடு இருக்கு. விஷயம் தெரிஞ்ச பலரும் வந்து பார்வையிட்டுப் போறாங்க.
வீட்டுக்காக தொடங்கின ஒரு விஷயம், இப்ப நாட்டுல நாலுபேருக்கு
பயன் படக்கூடியதாவும் மாறியிருக்கறத நினைக்கும்போது மகிழ்ச்சியா
இருக்கு."
|
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
No Comment to " காய்கறி வாங்க கடைக்கு போறதில்லை! "
Your Comment Has Been Published!