வேர்க்கடலையை

By Unknown → செவ்வாய், 30 செப்டம்பர், 2014
Advertise
ஆரோக்கியப் பெட்டகம்: வேர்க்கடலையின் மருத்துவ குணங்கள்:-
அதிக புரதச் சத்து நிறைந்தது. அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில் அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆற்றலையும் புரதச் சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம்.ஆனால், வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். 20 கடலைகளுக்கு மேல் எடுக்க வேண்டாம்.
என்ன இருக்கிறது?
100 கிராமில்...
பச்சை மற்றும் வேக வைத்த வேர்க்கடலை
ஆற்றல் 567 கிலோ கலோரிகள்
புரதம் 25.3 கிராம்
கொழுப்பு 40 கிராம்
வறுத்தது
ஆற்றல் 570 கிலோ கலோரிகள்
புரதம் 26.2 கிராம்
கொழுப்பு 39.8 கிராம்
கடலைப் புண்ணாக்கு
ஆற்றல் 386 கிலோ கலோரிகள்
புரதம் 40.9 கிராம்
கொழுப்பு 7.4 கிராம்
எண்ணெய்
ஆற்றல் 900 கிலோ கலோரிகள்
புரதம் 0 கிராம்
கொழுப்பு 100 கிராம்.
இவை தவிர 100 கிராம் வேர்க்கடலையில் கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ சத்தானது 37 மி.கி. அளவும், தயாமின் 1 மி.கி. அளவும் இருக்கின்றன.
வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும் வைட்டமின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம் கொண்டது. உணவுத் தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே அதிகம் பயன்படுத்துகிறோம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற புண்ணாக்கில், வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது. அதனால்தான் அதை மாட்டுத்தீவனமாக உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து உள்ளதை நாம் ஏன் சாப்பிடக் கூடாது என்கிற கேள்வி வரலாம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற புண்ணாக்கு பெரும்பாலும் தரமாகவோ, சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம். அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய புண்ணாக்கை குழந்தைகளுக்கான உணவிலும், விளையாட்டு வீரர்களுக்கான உணவிலும் சிறிது சேர்க்கிறார்கள். லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம் அதில் அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும்.
வேர்க்கடலையில் இருந்து பெறப்படுகிற எண்ணெய் நல்லதா, கெட்டதா என்றால், அது பாமாயிலை விட சிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடலை எண்ணெயில் எசென்ஷியல் அமினோ ஆசிட் எனப்படுகிற அத்தியாவசிய அமினோ அமிலம் இருப்பதே காரணம். ஆனாலும், கடலை எண்ணெய்தான் பெஸ்ட் என்று சொல்ல முடியாது. எண்ணெய்களில் நம்பர் 1 இடம் நல்லெண்ணெய்க்குத்தான். வேர்க்கடலையை சரியாகப் பாதுகாக்காமல், சரியாகக் காய வைக்காமல் எண்ணெய் தயாரித்தால் அது ஆரோக்கியமானதாக இருக்காது. வேர்க்கடலையில் எளிதில் பூஞ்சை பிடிக்கும். அத்தகைய கடலையில் எண்ணெய் தயாரித்தால், அதில் ‘ஆஃப்லாடாக்சின்’ எனப்படுகிற நச்சுத்தன்மை உருவாகும். அது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. வேர்க்கடலையை மிகப் பக்குவமாக வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிட வேண்டும். ஒருநாளைக்கு நமக்குத் தேவையான சக்தியில் 20 சதவிகிதம் கண்ணுக்குத் தெரிகிற எண்ணெயில் இருந்து கிடைக்கிறது. அந்த எண்ணெய் உபயோகத்தில் 15 முதல் 20 சதவிகிதம் கடலை எண்ணெயாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளலாம்.
வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன பலன்?
இதில் மக்னீசியம் அதிகம் என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும். மாங்கனீசு என்கிற தாது உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக வைக்கும். வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது. அதிலுள்ள தாமிரச் சத்தானது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது. எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளோருக்கும் வேர்க்கடலை உதவுகிறது. தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பச்சை வேர்க்கடலை கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகும்.
தீவிரமான மன அழுத்தத்தில் இருப்போருக்கும் வேர்க்கடலை உடனடி நிவாரணம் தரும் மருந்து. ரொம்ப விரக்தி யான மனநிலையில் இருக்கும்போது சிறு துண்டு கடலைமிட்டாய் சாப்பிட்டுப் பாருங்கள்... மாற்றம் உணர்வீர்கள்!
ஸ்பெஷல் வேர்க்கடலை ரெசிபி
சிம்ளி
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 1 கப், உப்பு - 1 சிட்டிகை, வேர்க்கடலை - 50 கிராம், வெல்லம் - 50 கிராம், எள் - 20 கிராம், கொப்பரைத் துருவல் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவில் உப்பும், தேவையான தண்ணீரும் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்தி மாதிரி 2 ரொட்டிகள் தயாரித்து வைக்கவும். பிறகு அத்துடன் மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, முடிந்தால் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து, லட்டு போல உருட்டிப் பரிமாறவும். உரலில் அடித்துச் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
மசாலா வேர்க்கடலை
என்னென்ன தேவை?
வேர்க்கடலை -100 கிராம், தக்காளி - 50 கிராம், அரிசி மாவு - 10 கிராம், மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், அம்சூர் தூள் (உலர்ந்த மாங்காய் தூள்) அல்லது எலுமிச்சைச்சாறு - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காய்ந்த வேர்க்கடலையை நனைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து, நனைத்த வேர்க்கடலையுடன் பிரட்டி மைக்ரோ வேவ் அவனில் பரப்பி ஒரு நிமிடம் வைக்கவும். பிறகு பிரித்து வைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மறுபடியும் 2 முதல் 3 நிமிடங்கள் வைக்கவும். கரகரப்பாக வறுபட்டதும், ஆறவைத்து ஒரு டப்பாவில் நிரப்பி வைக்கவும்.
பீநட் பட்டர் (வேர்க்கடலை வெண்ணெய்)
என்னென்ன தேவை?
உப்பு சேர்க்காத வேர்க்கடலை - 50 கிராம், உப்பு - அரை டீஸ்பூன், தேன் - ஒன்றரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை முதலில் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். பிறகு அதில் சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்து அரைக்கவும். வெண்ணெய் போல அரைக்கும் போது உப்பு, சர்க்கரை, தேன் சேர்த்துக் கெட்டியாக அரைத்து, காற்றுப் புகாத டப்பாவில் நிரப்பி வைத்துப் பயன்படுத்தவும். இந்த பீநட் பட்டரை பிரெட், சப்பாத்தி, தோசை போன்றவற்றில் ஸ்பிரெட்டாக தடவிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். டயட்செய்கிறவர்களும் வெண்ணெய்க்கு பதில் இதை சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " வேர்க்கடலையை "

Your Comment Has Been Published!