கண்ணுக்கு மையழகு

By Unknown → சனி, 7 டிசம்பர், 2013
Advertise
கண்ணுக்கு மையழகு

தமிழ் மருத்துவம் கூறும் நோய்த்தடுப்பு முறைகளில் ஒன்று கண்களுக்கு மை தீட்டுதல்.அஞ்சனமிடுதல் என்று இதனைக் கூறுவர்.அஞ்சனம் என்றால் கருமை என்றொரு பொருளுண்டு.கருமை நிறமுடைய பொருளை கண்ணிமைகளில் மையாக தீட்டுவதால் அஞ்சனமிடுதல் என்றாயிற்று.கண்களுக்கு மையிடுதல் என்பது பழந்தமிழ் மக்களின் வாழ்வில் கலந்த ஒன்று.

இதனை,
“கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுமதம் கரப்பார்க்கு அறிந்து”
என்னும் வள்ளுவர் வாக்கால் அறியலாம்.”எம் காதலர் எப்போதும் என் கண்ணுள்ளே இருக்கின்றார்,கன்ணுக்கு மையிடும்போது அவர் மறைவதால் கண்களுக்கு மை தீட்ட மாட்டேன்” என்பது இக்குறளின் பொருள்.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்களுக்கு அஞ்சனமிடுவதால் கண் நோய்கள் தீருவதுமின்றி, அவை அணுகாதெனவும் தமிழ் மருத்துவம் கூறுகிறது.பழந்தமிழ் மக்களோடு பண்டைய எகிப்து மகளிரும் அழகிற்காகவும், கண்களை சூரிய வெப்பம் தாக்காதிருக்கவும் அஞ்சனமெழுதினர்.

தற்காலம் கடைகளில் கிடைக்கும் கண் மையானது தேன்மெழுகு,பாரபின்,செயற்கைநிறமூட்டிகள் மற்றும் அனிலின்பெராக்சைடு போன்ற செயற்கை வேதிப்பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.கண்களுக்கு அழகூட்டினாலும் ஆபத்துகளே இவற்றில் நிறைந்திருக்கின்றன.செயற்கைவேதிப்பொருட்களால் ஆகிய இம்மையினை நீண்ட நாட்கள் பயன்படுத்தும்போது கண் இமைகளில் அழற்சி உண்டாகி இமைகள் அரித்தல்,கண் குருடாதல் போன்றவை உண்டாகுமென்று செய்திகள் கூறுகின்றன.

செயற்கை கண்மையிலிருந்து நம் கண்களை பாதுகாக்க நாமே கண்மை தயாரித்து பயன்படுத்தலே சிறந்த வழி.

எப்படித் தயாரிப்பது?

கஞ்சியில்லாமல் நன்கு கழுவி காய வைத்த வெள்ளைப்பருத்தி துணியினை எடுத்துக்கொள்ளவும்.
வெள்ளைக்கரிசாலை(கரிசலாங்கண்ணி) இலையினை நீரில் கழுவி மண், தூசு இவற்றினை நீக்கியபின் இடித்து சாறெடுத்துக்கொள்ளவும்.

இக்கரிசாலைச் சாற்றில் மேற்சொன்ன பருத்தித் துணியினை நனைத்து வெயிலில் காயவிடவும்.துணி நன்கு காய்ந்ததும் மீண்டும் சாற்றில் நனைத்துக் காயவிடவும்.இவ்விதம் மொத்தம் பத்து முறை செய்து கொள்ளவும்.(ஒரே நேரத்தில் பத்துமுறை நனைத்து காயவைப்பது இயலாத செயல்.ஆகவே மூன்று மணிநேரம் கடந்து விட்டால் புதுப்புதுச் சாற்றில் நனைத்து காயவிடவும்).

பின் இந்த துணியினைத் தீயிட்டு எரித்து விளக்கெண்ணெய் பூசிய ஒரு தட்டினைப் புகைபடும்படி பிடிக்கவும்.

துணி முற்றிலும் எரிந்த பின்பு தட்டில் படிந்துள்ள கரியினை வழித்து எடுத்து நன்கு குழப்பி சிமிழில் அடைக்கவும்.

இதனைக் கண்மையாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண் இமைகளில் தீட்டிவர கண்ணோய்கள் அணுகாது.
மேற்சொன்ன மையில் உள்ள விளக்கெண்ணெய் கண்களுக்கு குளிர்ச்சியையும், கரிசாலை அதிகப்படியான குளிர்ச்சியினால் கண்கள் பாதிக்கபடாதபடி சிறு வெப்பத்தையும் அளிக்கிறது.ஆகவே கண்கள் நோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறது !



Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " கண்ணுக்கு மையழகு "

Your Comment Has Been Published!